தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகர் திடீரெனப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாவட்டக் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் அங்கு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியபோது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலையத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சூரங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையிலும், இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, சூரங்குடி அருகேயுள்ள மேல்மாந்தை, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதற்காக அவர் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, சூரங்குடி இன்ஸ்பெக்டர் சுதாகரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.