இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி பள்ளியின் அதிபர் எஸ். மரிய சிங்கராயர் மற்றும் தலைமையாசிரியர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நீதிபதி ஏ.வி. சுபாஷினி கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் கடமைகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
பள்ளியிலிருந்து தொடங்கிய இப்பேரணி டபிள்யூ.ஜி.சி. சாலை, இந்திரா காந்தி சிலை சாலை, ரயில் நிலையம் (புகைவண்டி நிலையம்) மற்றும் சின்னக்கோவில் வளாகம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன், அருகாமையில் உள்ள புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளும் திரளாகப் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்கள் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மிகுந்த கட்டுக்கோப்புடன் அணிவகுத்துச் சென்றனர்.

இப்பேரணியின் சிறப்பம்சமாக, பள்ளியின் அதிபர், தலைமையாசிரியர் மற்றும் உதவி அருட்தந்தையர்கள் ஆகியோர் பேரணி தொடங்கியது முதல் நிறைவடையும் வரை மாணவர்களோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு ஊக்கமளித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் லசாக் இயக்கப் பொறுப்பு ஆசிரியர் அருள் ஜான் போஸ்கோ மற்றும் இயக்க மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

