வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் கல்வித் தொடர்ச்சிக்காகப் பள்ளிகளில் சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகளைச் செயல்படுத்தக் கோரி, தமிழக முதல்வருக்கு 'எம்பவர் இந்தியா'அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், : பள்ளி நேரங்களில் தேவைப்படும் போதெல்லாம் இரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கவும், CGMS உள்ளிட்ட கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.
பள்ளி நேரங்களில் இன்சுலின் செலுத்திக் கொள்ள அனுமதிப்பதோடு, குளிர்பதன வசதி உள்ளிட்ட பாதுகாப்பான சேமிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உரிய நேரத்தில் உணவு, சிற்றுண்டி அல்லது குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.உடற்கல்வி, விளையாட்டு மற்றும் பிற பள்ளி நடவடிக்கைகளில் மாணவர்கள் பாதுகாப்பாகப் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்; எந்தக் காரணத்திற்காகவும் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது.
நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் திடீர் மாற்றங்களின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாகுபாடின்றி ஆதரவு அளிக்க வேண்டும்.தேர்வு நேரங்களில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்; பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு இன்சுலின் பேனாக்கள், பம்புகள், குளுக்கோஸ் மாத்திரைகள், தண்ணீர், CGMS கருவிகள், சிற்றுண்டிகள் மற்றும் பழங்களைத் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கவும், தவிர்க்கக்கூடிய கட்டுப்பாடுகள் இன்றி மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடரவும் இந்தச் சலுகைகள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக விரைந்து சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் நகல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

