தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ், 100 சதவீத மானியத்தில் ரூ. 30,000 மதிப்பிலான 5 ஆடுகள் பெற டிசம்பர் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் திருநங்கைகள் இணையதளம் வழியாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ. 30,000 மதிப்பிலான 5 ஆடுகள் மற்றும் ஊக்கத்தொகை:

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குப் பின்வரும் சலுகைகள் வழங்கப்படும்:

ரூ. 30,000 மதிப்பிலான ஒரு ஆண் கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் (அல்லது 5 பெண் ஆடுகள்) வழங்கப்படும்.

ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, அவற்றை வீட்டிற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு மற்றும் உடனடித் தீவனச் செலவுக்காக ரூ.2,500 வழங்கப்படும்.

ஆடுகளை நல்ல முறையில் பராமரித்து வருபவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு ரூ. 2,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?:

18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நேற்று (நவம்பர் 27) முதல் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வரை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.