தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று, தவணைத் தொகை மற்றும் நிலுவைத் தொகை செலுத்தத் தவறிய தகுதியுடைய ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசு வட்டித் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணை (நிலை) எண். 204 (நாள்: 11.11.2026)-இன் படி அறிவிக்கப்பட்டுள்ள இச்சலுகையின் விவரங்கள்:
மாதத் தவணையைத் தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டிக்கு, ஆண்டுக்கு 5 மாதங்கள் வீதம் வட்டித் தள்ளுபடி வழங்கப்படும்.
இச்சலுகை எதிர்வரும் 10.11.2027-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற தகுதியான ஒதுக்கீடுதாரர்களில், 31.03.2026-க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் இந்நாள் வரை நிலுவைத் தொகை செலுத்தத் தவறியவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 10.11.2027-க்குள் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாகச் செலுத்திக் கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஏற்கெனவே முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களும் திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவைத் தொடர்பு கொண்டு உடனடியாகக் கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் எனத் திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் ஜான் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.

