தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1896-ஆம் ஆண்டு பிறந்த சுப்பையா, நாகலிங்கஜோதி என்பவரைக் குருவாக ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யாமல் இப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து வாழ்ந்து வந்தார்.

1969-ஆம் ஆண்டு தமது 73-ஆம் வயதில் தியான நிலையில் உயிர் நீத்த அவரைத் தொடர்ந்து, எட்டையாபுரம் நடுவிற்பட்டி செங்குந்தர் நடுநிலைப் பள்ளி அருகே உட்கார்ந்த நிலையிலேயே உப்பு மற்றும் திருநீர் கொண்டு சமாதி அமைக்கப்பட்டது. அதன் மீது குருநாதரான லிங்க மேனியைப் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டப்பட்டு மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் குருபூஜை விழாவின் 57-ஆம் ஆண்டையொட்டி, இன்று காலை கோவிலில் உள்ள விநாயகர், முருகன் சிலைகளுக்குப் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் சுப்பையா சித்தர் சுவாமிகளுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பல வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுத் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.