தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே எதிரே வந்த லாரிக்கு இடமளித்துச் செல்ல முயன்ற அரசுப் பேருந்து சாலையோர மரக்கிளையில் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர். விபத்தில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.

நாகர்கோவில் திங்கள்நகர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து திருச்செந்தூருக்குச் சென்ற அரசுப் பேருந்து, மீண்டும் திங்கள்நகர் நோக்கிச் சாத்தான்குளம் வழியாக வந்து கொண்டிருந்தது. பேருந்தை நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் ஞானசேகரன் ஓட்டினார்; நடத்துநராகக் கோபாலகிருஷ்ணன் பணியில் இருந்தார்.

இட்டமொழி சாலையில் பேருந்து வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரிக்கு வழி விடுவதற்காகச் சாலையோரத்தில் இருந்த மரக்கிளையில் பேருந்து திடீரென மோதியது. இதில் முன்பக்கக் கண்ணாடி சிதறி நொறுங்கியது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த செல்வி (62), செல்வி (50), சரஸ்வதி கனி (70), ராஜலிங்கம், முத்துகுமார், சுப்பையா, சித்திரைபாண்டி, கோபால் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், 4 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்; மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சிலர் சிறிய காயங்களுடன் மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனர். சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடிகளைப் போலீசார் மற்றும் வர்த்தகச் சங்கத்தினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜான் ஞானசேகரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

சாத்தான்குளம் - இட்டமொழி பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை முன் உள்ள மரக்கிளை சாலைப் பக்கம் வளைந்து நிற்பதால், இதற்கு முன்பும் பேருந்து மற்றும் லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறின்றி மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.