தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மயான கரைப் பகுதியில் நின்றிருந்த இளைஞர் பச்சை பெருமாளை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துத் தாக்கியதாக 3 சிறுவர்களைத் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 சிறுவர்கள் உள்பட மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் மருத்துவர் காலனியைச் சேர்ந்தவர் பச்சை பெருமாள் (21), கூலித்தொழிலாளி. இவர் லூர்தம்மாள்புரம் மயான கரைப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிலரிடம் அவர்கள் யார், எதற்காக அங்கு வந்துள்ளனர் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அரிவாளைக் காட்டி பச்சை பெருமாளுக்குக் கொலை மிரட்டல் விடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற பச்சை பெருமாள் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மரியவிஜயன் (20) மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களைக் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.