தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பகுதியில் உள்ள மல்லிகா ஸ்டோரில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து முறப்பநாடு உதவி ஆய்வாளர் லூர்து சேவியர், தலைமைக் காவலர் மகேஷ் ராஜா, இரண்டாம் நிலைக் காவலர் ராஜ்குமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், 35 மதுபாட்டில்கள், 35 புகையிலைப் பண்டல்கள் மற்றும் 2 கூல் லிப் பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் பாரத் (19) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

