தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள மேலமங்கலம் கிராமம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரண்யா (19). எட்டயபுரம் சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் படித்து வந்தார். சரண்யாவும், முருகேசனும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். சரண்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 28) இரவு முருகேசன் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முருகேசன் தனது அறையில் படுத்துத் தூங்கிவிட்டார். இன்று அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது, சரண்யா வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார், சரண்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், சரண்யாவின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.