திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் அந்தோணிராஜ் (38), லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த இவர், கடலூர் பகுதிக்குக் கரி லோடு ஏற்றிச் சென்று திரும்பியிருந்தார்.
காலில் புண் இருப்பதாகக் கூறி அவர் பணிக்கு வரவில்லை என நிறுவனத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 3-வது மைல் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திய அந்தோணிராஜ், புறவழிச்சாலையில் புதிய துறைமுகம் செல்லும் பாதையில் உணவருந்துவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதி வழியாகச் சாலையைக் கடக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ட்ரெய்லர் லாரியின் முன்பக்கச் சக்கரம் அவர் மீது ஏறியதில், அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர், உயிரிழந்த அந்தோணிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய ட்ரெய்லர் லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம் வாழப்பாடி முனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் மகன் அங்கமுத்து (46) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

