தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில், லூசியா எதிர்ப்புறம் அமைந்துள்ள சிவநல்லபெருமாள் நகர் பகுதியில் இரவு நேரக் காவல் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவநல்லபெருமாள் நகரில் காலி மனைகள் அதிகளவில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் காலி மனைகளிலும் சாலையோரங்களிலும் சிலர் அமர்ந்து மது அருந்துவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்பு இப்பகுதிக்குக் காவல் ரோந்து வாகனம் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு முறை வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக ரோந்து வாகனத்தின் வருகை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் ரோந்துப் பணியை மீண்டும் முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.