தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2027 பணிக்கான சிறப்பு முகாம்களை, மாவட்ட தேர்தல் பார்வையாளரும் சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம் இன்று (நவம்பர் 29) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்களைப் பெறுவதற்காக நவம்பர் 21, 22 மற்றும் இன்று (நவம்பர் 29) ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான விஷு மகாஜன் தலைமையில், தேர்தல் பார்வையாளர் ஆசியா மரியம் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவைகுண்டம் தொகுதி செய்துங்கநல்லூர் புனித லூயிஸ் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி வல்லநாடு கஸ்பா தேசபந்து வி.டி.வி. தெய்வநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை டி.டி.டி.ஏ. பி.எஸ். பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தூத்துக்குடி தொகுதி மில்லர்புரம் புனித மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் பணிகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்த அவர், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், இளம் வாக்காளர்களைப் பெருமளவில் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து, தூத்துக்குடி அரசு உயர் சிகிச்சை மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவத் திட்டப்பணிகளையும் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன், வட்டாட்சியர்கள் அய்யனார் (ஓட்டப்பிடாரம்), திருமணி ஸ்டாலின் (தூத்துக்குடி), தாஹிர் அஹமது (திருவைகுண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.