தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு மற்றும் வால்மார்ட் நிறுவனத்தினர் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSME) ஏற்றுமதி வழிகாட்டுதல் மற்றும் உற்பத்திப் பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்வதற்குப் பதிவு செய்தல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை உலகச் சந்தையில் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதியில் அதிகளவில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசின் “வழிகாட்டி” அமைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் இளம் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “வால்மார்ட்” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ஸ்வர்ணலதா, கோயம்புத்தூர் அயல்நாட்டு வணிக வளர்ச்சி அலுவலர் சிவஞானம் (காணொலி வாயிலாக), வால்மார்ட் நிறுவனத்தின் மேலாளர் சந்தோஷ் மற்றும் ஏற்றுமதி செய்ய விரும்பும் சுமார் 120 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

