தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் செல் சீனி காலனி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், காவல் துறையினரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதைக் கண்டு உஷாரான காவல் துறையினர், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி வள்ளியநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் ராஜ்குமார் (என்ற) காட்டுவாசி (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராஜ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.