தூத்துக்குடி வடபாகம் அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் தசரா நவராத்திரி திருவிழாவின் போது அம்பாளுக்கு தங்க மற்றும் வெள்ளி நகை ஆபரணங்கள் அணிவிக்கப்படாமல் வழிபாடு நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் ஏ. இசக்கிலெட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய திருக்கோவில்கள் முதல் சிறிய சமுதாயக் கோவில்கள் வரை அனைத்துக் கோவில்களிலும் தசரா நவராத்திரி திருவிழா அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி வடபாகம் அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். இதற்காக அம்பாளுக்கு உரிய தங்கம் மற்றும் வெள்ளி நகை ஆபரணங்கள் அலங்காரத்தின் போது அணிவிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இம்முறை தசரா கொடியேறி நான்காவது நாள் மண்டகப்படி இன்று நடைபெறும் நிலையிலும், நேற்று வரை அம்பாளுக்கு உரிய நகை ஆபரணங்கள் அணிவிக்கப்படாமல் கோவில் நிர்வாகத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். இது சந்தனமாரி அம்பாளை வணங்கும் அப்பகுதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற நாட்களில் அம்பாளுக்கு உரிய தங்க மற்றும் வெள்ளி நகை ஆபரணங்களுடன் அலங்காரம் செய்து, தசரா நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

