தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (02.09.2026), சிட்னியில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமைத் துணை தூதர் ஜானகிராமன், மாவட்ட ஆட்சியர்விஷு மகாஜன் உடன் இணைந்து "புவிசார் குறியீடு" (GI) மற்றும் "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு" (ODOP) நிறுவனங்களுடன் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைமிக்கப் புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற பொருட்களான கோவில்பட்டி கடலைமிட்டாய், ஆத்தூர் வெற்றிலை, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இப் பொருட்களை ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வழிமுறைகள் குறித்துத் துணை தூதர் விரிவாக ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள், துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைத் தலைமைத் துணை தூதர் நேரில் பார்வையிட்டார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்ட அவர், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் முன்னணித் தொழில் நிறுவனப் பிரிவுகளைப் பார்வையிட்டு, தொழில் மேம்பாடு மற்றும் வர்த்தக விரிவாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் திருமதி ஸ்வர்ணலதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) துணை இயக்குநர், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.