திருச்செந்தூர் கடல் பகுதியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்துத் தங்கள் மீன்களைப் பறித்துக் கொள்வதாகக் கூறி, தூத்துக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தைப் பொதுமக்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்குப்பகுதியில் உள்ள முத்தரையர் காலனி, விவேகானந்தர் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கணவாய் மீன்பிடிப்பு மற்றும் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கடல் பகுதிக்குச் சென்று கணவாய் மீன்கள் மற்றும் தூண்டில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது எனக் கூறி, மீனவர்கள் பிடித்த மீன்களைப் பறித்துக்கொண்டு விரட்டுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவலறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

