தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் மீன்வள விரிவாக்கத் துறை மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென் மாவட்டங்களில் மீனவ மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான மீன்வளத் தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை நடத்தி வருகின்றது.
மீனவ சமூகங்களுக்கு தொழில் நுட்பங்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கும், உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் இது போன்ற பயிற்சிகள் உதவி செய்கிறது.
இந்த பயிற்சியானது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கடற்பாசி வளர்த்தல், மீன் மாவு, மீன் எண்ணெய், இறால் ஊறுகாய், மீன் கட்லெட், உலர் மீன் தயாரித்தல் ஆகியவை குறித்து வல்லுநர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் டீன் சண்முகம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் வழங்கினார். அவர் பேசும் போது கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான கடல்சார் மீன் வள மாவட்டங்களில் ஒன்றாகும்.
நீண்ட கடற்கரைப் பகுதி, பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் வளங்கள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகள் இம் மாவட்டத்தின் சிறப்பம்சமாகும். மீன்வளத் துறையின் எதிர்கால வளர்ச்சி ஒவ்வொரு வளத்திற்கும் அதிகப்பட்ச மதிப்பை உருவாக்குவதில் தான் உள்ளது எனக் கூறினார்.
இதில் மீன்வளக் கல்லூரி உதவிப் பேராசிரியை அருள் மொழி மற்றும் உதவிப் பேராசிரியை கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

