வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த இளம் / முதல்முறை வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, தொடர் திருத்த நடைமுறையின் கீழ் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்புத் தீவிரத் திருத்தக் (SIR) காலக்கட்டம் அல்லாத நடைமுறை நாட்களில் 'வாக்காளர் பதிவு விதிகள் 1960'-ன் படி அதற்கான படிவங்களைப் பயன்படுத்திப் பெயர்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்புச் சேர்க்கை முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள கால அட்டவணை மற்றும் விண்ணப்ப மனுக்கள் பெறப்படும் இடங்கள் குறித்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெயர் விடுபட்ட நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.