காந்தி ஜெயந்தியை முன்னிட்டுத் தமிழ்நாடு அரசால் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 38 பேரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,495 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தி நாளான இன்று (அக்டோபர் 2) மாநிலம் முழுவதும் அனைத்து மதுபானக் கடைகளும் கட்டாயமாகக் அடைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட எல்லைக்குள் சட்டவிரோதமாகப் பதுக்கி மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் உத்தரவிட்டார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், அனைத்து உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.இந்த அதிரடிச் சோதனையில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 38 நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில் தீவிரக் குற்றப் பின்னணி கொண்ட 15 பேர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 1,495 மதுபாட்டில்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மது விலக்குச் சட்டங்களை மீறுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.