காந்தியடிகளின் 158 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி வ.உ.சி சாலை கிழக்கு மண்டலம் (பழைய மாநகராட்சி) அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று (02.10.2026) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி.சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் அங்காடியில் மகாத்மா காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து மலர் தூவி, தீபாவளி சிறப்பு கதர் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் கதர் அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், இவ்வலுவலக கட்டுப்பாட்டில் 3 வாரிய தொழில் கூட்டுறவு சங்கங்களும் மற்றும் 23 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உத்தமர் காந்தியடிகளின் 158வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இன்றையதினம் (02.10.2026) முதல் சிறப்பு கதர் விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும்.

மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டி சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணைகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30%ம், உல்லன் ரகங்களுக்கு 20%-ம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலம் வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

2026-2027ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.60 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா, சார் ஆட்சியர் விவேக் யாதவ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், குடிசைத்தொழில் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், காதி கிராப்ட் அங்காடி பணியாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.