தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் காவலர் இந்திராகாந்தியைக் கட்டாய ஓய்வில் செல்ல உத்தரவிட்டுத் தமிழகக் காவல்துறை தலைவர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த பெண் காவலர் இந்திராகாந்தி (32), தொடர் புகார்கள் காரணமாகக் கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி உயர் அதிகாரிகளிடம் அவர் மனு அளித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் எஸ்.பி. கார் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனக்குப் பிழைப்பு ஊதியமும் முறையாகக் கிடைக்கவில்லை என்றும், தான் கர்ப்பமாக இருப்பதால் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, கடந்த மாதம் 22-ஆம் தேதி அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுப் பசுவந்தனை காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
எனினும், அவர் மீது நிலுவையில் இருந்த தொடர் குற்ற வழக்குகள் மற்றும் பணியில் இருந்தபோது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அவரைப் பணியில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்ப டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டது.
டி.ஜி.பி அலுவலகத்தின் இந்த உத்தரவு தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம் மூலமாகப் பசுவந்தனை காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

