தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழர் கலாசாரம், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (நவம்பர் 29) தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இருப்பினும், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவில் உறுதியுடன் இருப்பதாக மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை ஒட்டுமொத்த நாட்டையும், குறிப்பாகத் தென்மாநிலங்களையும் தமிழ்நாட்டையும் வெகுவாகப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த மசோதாவால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்படுவதுடன், கூடுதலாகும் இடங்களெல்லாம் பாஜகவுக்கே செல்லும்; இது இந்திய அரசியலமைப்பையே மாற்றிவிடும். அஸ்ஸாம், ஜம்மு - காஷ்மீரில் சோதனை நடத்திய பாஜக, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதனைச் செயல்படுத்த முயல்கிறது. எனவே, பாஜக இதனைச் செயல்படுத்த விடக் கூடாது எனத் தமிழ்நாட்டின் பாதுகாவலரான சகோதரர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தினோம்” என்றார்.
மேலும், “ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழர்களின் மொழி, கலாசாரத்தை வெறுப்பதுடன், அவர்களைக் கட்டுப்படுத்தவும் முயல்கிறது. மக்களவையில் 850 இடங்களை பாஜக கொண்டுவந்தால் இந்திய அரசியலமைப்பு முடிவுக்கு வருவதோடு, தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதான தாக்குதலையும் தொடங்கிவிடுவர். இம்மசோதா தமிழ்க் கலாசாரம், தமிழ் மக்கள் மற்றும் மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

