திருநெல்வேலி மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களைச் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (20) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனைச் சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்துக் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து இசக்கிராஜாவைக் காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை எச்சரிக்கை:

இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றைப் பகிர்வு செய்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாகத் தீங்கிழைக்கும் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும், நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ, பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.