தமிழகத்தின் மையப் பகுதியாகத் திகழும் திருச்சிராப்பள்ளியை மரங்களால் அலங்கரிக்கும் விதைப்பந்து திட்டம் 200 ஆண்டுகளைக் கடந்த பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
விதைப்பந்துகளைச் செய்து வீசி மரப்பெருக்கத்தை உண்டாக்கும் பசுமைத் திட்டத்தை விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் துவக்கி வைத்தார்.
13,000 மாணவ, மாணவியர் கல்வி பயிலும் புகழ்மிக்க தரமான கல்லூரி எனப் பெயர் பெற்றது பிஷப் ஹீபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தலா ஐந்து மர விதைகளைக் கொண்ட ஒரு லட்சம் விதைப்பந்துகளைச் செய்து “காகம் பறவா காவேரிக் கரைகளை” கூடுதல் மரங்களால் நிரப்ப மாணவ, மாணவிகள் உறுதியேற்றனர்.
“பிராண வாயு உற்பத்தியாளர்கள்” என்ற பரிணாம வளர்ச்சியை, படிக்கின்ற பிள்ளைகள் அடையும் வழிமுறைகளை திருமாறன் புரிய வைத்தார்.
விதைப்பந்து நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதன்மையர் ஆனந்த் கிதியோன் தலைமை தாங்கினார். உதவி புல முதன்மையர்கள் கேப்ரியல், சாம் தேவ ஆசீர் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை உதவி பேராசிரியர் அய்யனார், ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் மில்டன் அனன்யா, உதவிப் பேராசிரியர்கள் பிராங்கிளின் தேவராஜ், நவசக்திவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
திருச்சியே திரும்பிப் பார்க்கும் வகையில் விதைப்பந்து தயாரித்து வீசும் நிகழ்வு டிசம்பர் மாத துவக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்படுகை, சாலையோரங்கள், கல்லூரி தத்தெடுத்துள்ள திருச்சியைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்கள், ஈரக்கசிவு உள்ள இடங்களில் விதைப்பந்துகள் எறியப்படவுள்ளன.
கல்லூரி மாணவப் பொறுப்பாளர்கள் வி. சுஜித் குமார், சஞ்சய் கிருஷ்ணகுமார், மோகித், சுபாஷினி, காயத்ரி, ஆனந்த ஸ்வரூபிணி விதைப்பந்து திட்டம் வேகம் எடுக்க கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
விதைப் பந்துகள் தயாரிக்கும் முக்கியத்துவம், செய்முறைகள், அதனை எறியும் இடங்கள், மறுபடி அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கும் அவசியம், தொடர்ந்து 4, 5 வருடங்கள் விதைப்பந்துகள் செய்து வீசினால் ஏற்படும் மாற்றங்கள் என திருமாறன் மாணவ, மாணவிகளுக்குப் புரிய வைத்தார்.
விதைப்பந்துகளை பிஷப் ஹீபர் கல்லூரி செய்யும்போது மாணவ, மாணவிகளை திருச்சி 9வது போலீஸ் பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த உள்ளார்.
விதைப்பந்து திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் திருமாறன் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடி 24 லட்சத்து 872 பள்ளி மாணவ, மாணவியரும், 35 லட்சத்து 80 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவியரும் ஒருங்கிணைந்து தலைக்கு நூறு விதைப்பந்துகளை தமிழகத்தில் விதைத்தால் பசுமை மேலோங்கும். மரங்கள் செழித்து வளரும்.

