பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது குப்பைகளை பொது இடங்கள், சாலையோரங்கள் மற்றும் திறந்தவெளிகளில் கொட்டுவது சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.

நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது, திறந்தவெளியில் கொட்டப்பட்ட குப்பைகளில் இருந்து ஒரு ரசீது கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த ரசீதில் உள்ள விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் முகவரியைக் கண்டறிய இயலவில்லை.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில், திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து கண்டறியப்படும் ரசீதுகள் மற்றும் பிற ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும். உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்.

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மாநகராட்சி நிர்ணயித்துள்ள முறைகளின்படி குப்பைகளைத் தரம் பிரித்து, உரிய முறையில் ஒப்படைத்து, நாகர்கோவில் மாநகரத்தைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.