தமிழகத்தில் தற்போது வெறும் 'ரீல்ஸ்' ஆட்சிதான் நடைபெறுகிறது என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, மூலனூரில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:"தாராபுரம் தொகுதியில் கிராமங்கள் அதிகமாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் மிகுந்த அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையில் அழுகிறார்; அவரை விஜய் தேற்றுகிறார். அவர் அழ வேண்டிய அவசியம் என்ன? மக்களின் உண்மையான காரணியான அதிமுகவுக்குத் தாராபுரம் தொகுதியில் மக்கள் பெருவாரியான வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

தமிழகத்தில் தற்போது வெறும் ரீல்ஸ் ஆட்சிதான் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் 5, 6 இடங்களில் மட்டுமே பேசிய விஜய், நாளை 39 இடங்களில் பேசவுள்ளார் என்றால், அது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிதான். இதற்கு இந்த தாராபுரம் இடைத்தேர்தலும் சத்யபாமாவும் தான் காரணம்.

முதலமைச்சர் வீட்டில் இருந்து வெறும் 7 கி.மீ. தொலைவில் உள்ள நிறுவனத்திற்காக விஜய் லண்டனுக்குச் சென்று தொழில் முதலீட்டை ஈர்க்கிறார் என்று சொன்னால், மக்களை அவர் எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்?

தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமே சொல்லியுள்ளார். எனவே, இந்த இடைத்தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்" எனப் பேசினார்.