தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற போராட்டங்களில், தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

எஸ்ஐஆர் (SIR) உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (அக். 2) போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டது. மேலும், போராட்டத்திற்கு டெல்லி போலீசார் தடையும் விதித்திருந்தனர்.

தடையை மீறிப் போராட்டம் – தலைவர்கள் கைது:

போலீசாரின் தடையையும் மீறி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி, சிபிஎம் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா, முன்னாள் முதல்வர் ஆதிஷி, சஞ்சய் சிங் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையிலும் பரபரப்பு:

இதேபோல், சிஜேபி சார்பில் மும்பை சிவாஜி பார்க்கில் போராட்டம் நடத்தப்படும் என அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். மகாராஷ்டிரா போலீசார் அனுமதி மறுத்த போதிலும், சிவாஜி பார்க் பகுதியில் திரண்ட இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.