டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 31 வயது இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதற்காகக் கனடாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து இந்தியா வந்த 61 வயதுப் பெண், வயது வித்தியாசம் காரணமாகத் திருமணம் மறுக்கப்பட்டதால் கனடா தூதரகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா காவல் நிலைய அதிகாரி சுரேந்திர யாதவ் கூறியதாவது: கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் (31) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேசி வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளனர்.

இதன்படி, அந்தப் பெண் சுற்றுலா விசாவில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி டெல்லிக்கு வந்தார். அவரை அங்கிருந்து அழைத்து வந்த நிதின், ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா பகுதியில் தங்க வைத்துள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்துத் திருமணம் குறித்துப் பேசியபோது, கனடா பெண்ணின் வயது 61 என்பது நிதினுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதின், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கனடா பெண் உடனடியாகக் கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துப் புகார் தெரிவித்தார். தூதரகத் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், நிதினை விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர்.

மேலும், கனடா பெண் பாதுகாப்பாகக் கோட்புட்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் அதிகாரி சுரேந்திர யாதவ் தெரிவித்தார்.