பாளையங்கோட்டையில் டாக்டருக்கு சொந்தமான வணிக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், காவலாளிகளை மிரட்டி கட்டிடத்தை ஆயுதத்தால் வெட்டியும், அடித்து நொறுக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டை 21வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பட்சிராஜன் (50). எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரான இவர், கொக்கிரகுளத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக நெல்லை - பழைய திருவனந்தபுரம் சாலையில் பெருமாள்புரம் ரவுண்டானா அருகே சுமார் 2 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகம் உள்ளது.

இந்தக் கட்டிடத்தை கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, தியாகராஜநகர் டிவிஎஸ் நகரைச் சேர்ந்த முகம்மது முசைதீன் (47) என்பவருக்கு ஒட்டல் நடத்துவதற்காக வாடகைக்கு கொடுத்தார். முகம்மது முசைதீன் வாடகை மற்றும் மின் கட்டணத்தைச் சரிவரச் செலுத்தாததால், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி அந்தக் கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அவர் கட்டிடத்தைக் காலி செய்ய ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து டாக்டர் பட்சிராஜன் நெல்லை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் முகம்மது முசைதீன் சமாதானம் பேசி கட்டிடத்தைக் காலி செய்தால், பட்சிராஜன் வழக்கை வாபஸ் பெற மனுதாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் அந்தக் கட்டிடத்தைப் பராமரிக்க தன வாய்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (48), சேதுராயன்புதூரைச் சேர்ந்த ரமேஷ் (45) ஆகியோரைக் காவலாளிகளாக நியமித்தார்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு முகம்மது முசைதீன் மற்றும் 5 பேர் காரில் அந்த வணிக வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் காவலாளிகள் இசக்கிமுத்து, ரமேஷ் ஆகியோரை ஆபாசமாகத் திட்டி தரையில் அமர வைத்து மிரட்டினர். தகவலறிந்த பட்சிராஜன், தான் காவல் நிலையம் செல்வதாகக் காவலாளிகளிடம் தெரிவித்தார்.

இதையறிந்த அந்தக் கும்பல், கையில் வைத்திருந்த சுமார் 5 அடி நீளமுள்ள கூர்மையான ஆயுதத்தால் வணிக வளாகத்தின் கதவு கொண்டியை வெட்டிச் சேதப்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்றது. இது குறித்து டாக்டர் பட்சிராஜன் நேற்று முன்தினம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முகம்மது முசைதீன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.