நடிகர் கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் தோற்றத்தைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் போலி ஆபாச உள்ளடக்கங்களாக உருவாக்கிச் சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளனர்.

தமது அனுமதி இன்றி அடையாளம் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தித் தமக்கு நற்பெயருக்கும் கண்ணியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்ருதிஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், சம்பந்தப்பட்ட போலி உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிபதி தனது உத்தரவில், "இணையத்தில் பரவும் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி ஆபாச உள்ளடக்கங்கள் ஒருவரது தனிப்பட்ட உரிமை, கண்ணியம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படுத்தும் தீவிரப் பாதிப்பை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் டீப்ஃபேக் எனப்படும் போலி வீடியோக்களும் புகைப்படங்களும் அதிகரித்து வருகின்றன.

ஒரு நபரின் முகம் அல்லது தோற்றத்தை வேறொரு வீடியோவில் பொருத்தி, அந்த நபர் உண்மையில் அதில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும். இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை ஆரம்பநிலையிலேயே தடுக்க வேண்டியது அவசியம். எனவே, பண இழப்பீட்டைக் காட்டிலும் முதலில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு, அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட்டுள்ளார்.