ஜப்பானில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்குத் தலா 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளான ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்குத் தலா ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி சீன அணியை எதிர்த்துப் போராடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. இந்தியாவுக்கு 61-வது பதக்கத்தைப் பெற்றுத் தந்த இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சாதனை படைத்த வீராங்கனைகளைப் பாராட்டித் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

அவர்களது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ₹30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனைகளின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் கிடைத்துள்ள இவ்வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் சிறந்த உத்வேகத்தை அளிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.