திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (13.10.2026) கலை பண்பாட்டுத்துறை சார்பாக பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, மாநிலத்தின் கலை பண்புகளை மேம்படுத்தவும் கலைஞர்களின் கலைத்திறனைச் சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக விருதுகளை வழங்கி வருகிறது.

இதன்படி, 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கலை விருதுகள் வழங்குவதற்காகக் கடந்த 17.09.2026 அன்று மாவட்டக் கலை மன்றத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான ஆனந்த் மோகன் தலைமையில் தெரிவுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலை முதுமணி ஆகிய 5 பிரிவுகளில் தலா 3 பே வீதம் 15 சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இரா.தீக் ஷனா (ஓவியம்), செல்வன் எஸ்.கே.முஹம்மது ஹபீப் ரஹ்மான் (சிலம்பம்), ச.கீர்த்திகா (பரதநாட்டியம்), ஆகியோர் கலை இளமணி விருதிற்கும், மு.கௌதம் (சிலம்பம்), க.சித்ரநாராயணன் (கணியான் கூத்து), இ.அம்பலவாணன் (நாதசுரம்) ஆகியோர் கலை வளர்மணி விருதிற்கும், தெ.ஆறுமுகம் (கரகாட்டம்), ச.தங்கராஜ் (கணியான்கூத்து), மீ.தமிழ்ச்செல்வி (பரதநாட்டியம்) ஆகியோர் கலை சுடர்மணி விருதிற்கும், ர.முருகன் (தவில்), அ.கிருஷ்ணன் (வில்லிசை), கு.ஐயம்மாள் (நாடகம்) ஆகியோர் கலை நன்மணி விருதிற்கும், எ.எஸ்.முருகன் (நாதசுரம்), ரா.கஸ்தூரிதிலகம் (குரலிசை), இரா.சிவராமகிருஷ்ணன் (ஓவியம்) ஆகியோர் கலை முதுமணி விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, கலை இளமணி விருதுக்குத் தலா ரூ.4,000, கலை வளர்மணி விருதுக்குத் தலா ரூ.6,000, கலை சுடர்மணி விருதுக்குத் தலா ரூ.10,000, கலை நன்மணி விருதுக்குத் தலா ரூ.15,000, கலை முதுமணி விருதுக்குத் தலா ரூ.20,000 என மொத்தம் 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் பட்டயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், கலைஞர்கள் தொடர்ந்து கலைகளில் சிறந்து விளங்கி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் து. சிவப்புகழ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம. கயிலைச்செல்வம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச. மகாகிருஷ்ணன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.