இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், இரு அணிகளுக்கும் இடையே முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்கச் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இப்போட்டிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி ஜப்பான் சென்று, ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்குச் 'சுசுகி கோப்பை' வழங்கப்படும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சானே தகாயிச்சி ஆகியோருக்கு இடையிலான உச்சிமாநாட்டின் போது எட்டப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘ஸ்போர்ட்75’ என்ற சிறப்பான முன்முயற்சியின் முதற்படியாக இந்த ஆட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி முடிந்த கையோடு, இந்தியக் கிரிக்கெட் அணி அங்கேயே உடனடியாகத் தொடங்கும் ஆசிய விளையாட்டுகளிலும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

