புதுக்கோட்டை அருகே சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 2-வது மனைவியைக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாகப் போலீஸ்காரர் மீது எழுந்துள்ள சந்தேகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (39). இவர் அரியலூர் மாவட்டம், வெங்கானூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்த துவார் கிராமத்தைச் சேர்ந்த மவுனிகா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மவுனிகா கர்ப்பமடைந்ததை அடுத்து, அவரை பிரபாகரன் கோவிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இதற்கிடையே, பணியிட மாறுதலாகி அரியலூருக்குச் சென்ற பிரபாகரன், அவ்வப்போது பிலாவிடுதியிலும் துவாரிலும் உள்ள குடும்பத்தினரைப் பார்த்து வந்துள்ளார். இதனிடையே, தன்னுடன் வந்து வாழுமாறு பிரபாகரனை மவுனிகா வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. கடந்த 7-ம் தேதி துவாரில் இருந்த மவுனிகாவை அரியலூருக்கு அழைத்துச் சென்ற பிரபாகரன், அதன்பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

மவுனிகாவின் தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீஸ்காரர் பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, தனிப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பிரபாகரனும் மவுனிகாவும் ஒன்றாகச் சென்றதும், பிலாவிடுதி அருகே உள்ள மானியவயல் சாலையில் பிரபாகரன் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், பிரபாகரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணால் மூடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பள்ளத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில் மவுனிகாவின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மவுனிகாவைக் கொன்று தோட்டத்தில் புதைத்திருக்கலாம் எனப் பிரபாகரன் மீது போலீசார் சந்தேகப்படுவதுடன், இதுதொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.