திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
திருச்செந்தூரில் இருந்து 30 பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்ற 'வெற்றிப் பயணம்' அரசுப் பேருந்து, குரும்பூர் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இப்பேருந்தை தென்காசியைச் சேர்ந்த தவசிமுத்து ஓட்டியதாகவும், நடத்துநராக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாரிகணேஷ் பணியில் இருந்துள்ளனர்.
குரும்பூர் ரயில்வே பாலம் அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் திடீரென புகை வெளியேறியுள்ளது. இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, பயணிகளை உடனடியாகக் கீழே இறங்குமாறு எச்சரித்துள்ளார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகப் பேருந்து எரிந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
ஓட்டுநரின் துரித நடவடிக்கையாலும் சரியான நேரத்திலான எச்சரிக்கையாலும் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக வீரமாணிக்கம் குளம் வழியாக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதோடு, திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

