ரயில் பயணங்களின்போது பயணிகள் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
ரயில் பயணத்தின்போது, மொபைல் போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது மற்றும் வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இதுகுறித்துத் தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி அளித்த பேட்டி விவரம்: "ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, பயணிகள் சிலர் தங்கள் மொபைல் போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சக பயணிகளுக்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்துகிறது. இது குறித்துப் பயணிகள் பலரும் புகார்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதற்கிடையே, 'ஜன விஷ்வாஸ்' சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதன்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மொபைல் போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணிகளுக்குத் தொல்லை கொடுத்தால், இனி 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அபராதத்தைத் டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப் பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம். மேலும், எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு அளித்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

