திருச்செந்தூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காமராஜ் நகர், பிச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளான சிபிதா (18), தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் (IT) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சிபிதாவின் தாயாரும் மற்ற இரண்டு சகோதரிகளும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தனர். தந்தை செந்தில்வேல் பரமன்குறிச்சிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.