மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டத்தைச் சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 2) முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்வின் போது அரசுப் பேருந்துகளில் ஏறிய முதலமைச்சர், பேருந்தில் பயணித்த பெண் பயணிகளுக்குக் கட்டணமில்லாப் பயணச் சீட்டுகளை (Free Tickets) வழங்கித் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். பதிலுக்குப் பெண் பயணிகள் முதலமைச்சருக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாகப் புறநகர்ப் பகுதிகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளோ கிடையாது. திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாகப் பயணிக்க முடியும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ. 6,000 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகளும் (69 விழுக்காடு), நாளொன்றுக்கு இயக்கப்படும் 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகளும் (85 விழுக்காடு) இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவர்.

cmvijayBusticket.jpg

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னரே இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.