வடகிழக்கு பருவமழையை முன்னிட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாளையங்கால்வாய் மற்றும் நயினார்குளம் பிரிவு கால்வாய் ஆகியவற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவமழையின் போது கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், நீர்வழித்தடங்கள், கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் கண்டறியப்பட்டு, கழிவுகள் மற்றும் அடைப்புகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

பாபநாசம் அணையிலிருந்து பாயும் 7 பிரதான கால்வாய்களில் ஒன்றான பாளையங்கால்வாய், பழவூர் தடுப்பணையில் தொடங்கிச் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பிற்குப் பாசன வசதி அளிக்கிறது. இக்கால்வாயில் TP சோலார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (CSR) 6 கி.மீ நீளத்திற்குத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெல்லை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நயினார்குளம் பிரிவு கால்வாயில், நீர்வளத் துறையின் சிறப்புத் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பீட்டில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வின் போது, தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடங்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் கால்வாய்களைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி முன்னெச்சரிக்கைப் பணிகளை விரைந்து முடிக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நீர்வளத்துறை உதவிச் செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், உதவிப் பொறியாளர் குத்தால செல்லம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.