தமிழ்நாட்டின் நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்களைச் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் கொண்ட "திடக்கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் திட்டம்" செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் திட்டங்கள்:

மதுரை, கடலூர் மற்றும் பிற பகுதிகள்: மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடியும், பழமையான 33 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னைக் கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுரை பாதாளச் சாக்கடை: மதுரையில் 40 ஆண்டுகள் பழமையான பாதாளச் சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 400 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும்.

நாகர்கோவில், குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி: நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் ரூ. 960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சாலைகள் மற்றும் நடைபாதை சீரமைப்பு:

குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்டுச் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ. 1,850 கோடி செலவிடப்படும்.

'வெற்றித்தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி' சென்னை மாநகராட்சியில் 45 சதுர கி.மீ பரப்பளவில் 35 கி.மீ நீளத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படும்.

பள்ளிகளைச் சுற்றி 15 கி.மீ நீளத்திற்குக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பிற மாநகராட்சிகளில் நவீன சாலைகள், நடைபாதைகள் மற்றும் பள்ளிப் பகுதிகளைச் சுற்றியுள்ள சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ. 165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சாலை மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மொத்தம் ரூ. 275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்கட்டமைப்பு:

நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில், புதிய வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ. 335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.