திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகப் புதிதாகத் தற்காலிகப் பணி நியமனம் செய்யப்பட்ட 79 செவிலியர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சியைத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் முன்னிலையில் இப்பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பேசுகையில், "மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதிலும் செவிலியர்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனர். செவிலியர் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; அது மனிதநேயத்துடன் கூடிய சேவையாகும்.

புதிதாகத் தற்காலிகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள், இப்பயிற்சியின் மூலம் தங்களது பணிக்குத் தேவையான நடைமுறை அறிவு, தொழில்நுட்பத் திறன் மற்றும் நோயாளிகளை அணுகும் முறைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நோயாளிகளிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டு, அரசின் மருத்துவத் திட்டங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகள் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இப்பயிற்சியின் போது செவிலியர்களுக்குத் தாய் சேய் நலம், தடுப்பூசி பணிகள், தொற்றா நோய் மற்றும் பள்ளி சிறார் நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் கி. லதா, மாவட்ட சுகாதார அலுவலர் பி.ஆர். முரளிசங்கர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். செல்வராஜன் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.