தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 'வெற்றிப் பயணம்' திட்டத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராபர்ட் புரூஸ் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் ஆகியோர் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணச் சீட்டுகளை வழங்கித் திட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 813 நகரப் பேருந்துகள், 257 புறநகர்ப் பேருந்துகள் என மொத்தம் 1,070 பேருந்துகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 189 நகரப் பேருந்துகள் மற்றும் 67 புறநகர்ப் பேருந்துகள் என மொத்தம் 257 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

முக்கிய வழித்தடங்கள்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்: ஏரல், ஆத்தூர், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி, பாபநாசம், அம்பை, தென்காசி, கடையம்.

வள்ளியூர்: திருநெல்வேலி, கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசி, இராதாபுரம், கன்னியாகுமரி.

திசையன்விளை & பாபநாசம்: திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, ஆலங்குளம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஓட்டுநர், நடத்துநர்களுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல்:

மகளிர் எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்துகளின் முகப்பு மற்றும் பின் கண்ணாடிகளில் 'வெற்றிப் பயணம்' என ஒளிரும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை முறைப்படி நிறுத்தி மகளிரை ஏற்றிச் செல்லவும், அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் சென்றால் போக்குவரத்துக் கழகத்திடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ நேரடியாகப் புகார் அளிக்கலாம்; உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் (நெல்லை மண்டலம்) செல்வம், கோட்ட மேலாளர் பூல்ராஜ், உதவி மேலாளர் மாரியப்பன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.