அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கூட்டாக வேட்பாளர்களை அறிவித்தனர்.

மதுராந்தகம் தொகுதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான பி.சுகந்தி போட்டியிடுகிறார்.

தாராபுரம் தொகுதி: கட்டிடத் தொழிலாளியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிநேர ஊழியருமான ப.லட்சுமணன் போட்டியிடுகிறார்.

5 முனைப் போட்டி நிலவரம்:

இதுவரை பிரதான திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த முறை தனித்து வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன. ஏற்கனவே த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பால் இவ்விரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உருவெடுத்துள்ளது.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டாக பேட்டி:

வேட்பாளர்களை அறிமுகம் செய்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெ.சண்முகம், மு.வீரபாண்டியன், பழ.ஆசைதம்பி ஆகியோர் அளித்த பேட்டியில்:

"எளிய மக்கள் வாழும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் எளிய மக்களுக்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் மக்களின் குரல் வலுவாக ஒலிக்க இடதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைவதற்குத்தான் நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோம்; அந்த ஆதரவு தற்போதும் தொடர்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் தேர்தல் உத்தியையும், இந்தச் சட்டமன்ற இடைத்தேர்தலையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை."

என்று தெரிவித்தனர்.