தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (31), கட்டிடத் தொழிலாளி. சம்பவத்தன்று இவரது செல்போன் காணாமல் போயுள்ளது. அன்றைய தினம் இரவு, பெருமாள் தனது நண்பர்களான சுப்பிரமணியபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (20), ரத்தினசாமி (20) மற்றும் பாலசந்தர் (23) ஆகிய மூவருடன் சேர்ந்து நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது பெருமாள், தனது காணாமல் போன செல்போன் குறித்து அந்த 3 பேரிடமும் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து பெருமாளை அடித்து உதைத்ததுடன், அருகில் கிடந்த கல்லால் அவரது தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

பெருமாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பெருமாளைத் தாக்கிய கருப்பசாமி, ரத்தினசாமி மற்றும் பாலசந்தர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.