தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் புதிய ஏவுதளத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசுகையில், "சமீபத்தில் பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்குக் கிடைத்த மிகச்சிறந்த வெகுமதியாகும்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆளில்லாத ராக்கெட்டை இந்த நிதியாண்டிற்குள் ஏவுவதற்காகத் தீவிரமான மற்றும் முறையான பணிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ குழுவினர் பல்வேறு தொழிற்துறைகள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அமைப்புகளின் மேம்பாடு உட்படக் ககன்யான் திட்டத்திற்கான கணிசமான வளர்ச்சிப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. மனித விண்வெளிப் பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் புதிய ஏவுதள உள்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்ட இலக்கின்படி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் புதிய ஏவுதளம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தயார் நிலையை அடையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது. மேலும், இந்த நிதியாண்டில் வழிசெலுத்தல் செயற்கைக்கோளான என்.வி.எஸ்-03 உட்பட மேலும் 6 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.