திருநெல்வேலி டவுனை அடுத்த பேட்டை எம்.ஜி.பி. 2-வது வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல் சலாம் (46). மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவரது 15 வயது மகன் ரஹீம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் ரஹீமின் வலது காலில் அடிபட்டு சவ்வு விலகியதால், சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி காலையில் வலது கால் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சைக்காகப் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்கு ரஹீம் அழைத்துச் செல்லப்பட்டார். மதியம் 1 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், மூத்த மருத்துவர் ஒருவர் சேக் அப்துல் சலாமை உள்ளே அழைத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தைக் காட்டியுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட வலது மூட்டிக்குப் பதிலாக இடது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சேக் அப்துல் சலாம் கேள்வி எழுப்பியபோது, தெரியாமல் தவறு நடந்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள், தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காகப் பின்னர் வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சேக் அப்துல் சலாம் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவர் மற்றும் அவருடன் இருந்த மருத்துவர்கள் மீது பி.என்.எஸ்.சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆய்வாளர் அழகர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே சுகாதாரத் துறை விசாரணை நடத்திய நிலையில், மாநகரப் போலீசாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

