மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

3 விசைப்படகுகள் மற்றும் 25 மீனவர்கள்: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான்சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து செவுள் வலை விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நேற்று அதிகாலையில் மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட 25 மீனவர்களும் நேற்று மாலையில் மாலத்தீவில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் மற்றும் கைது செய்யப்பட்ட தகவல்களை மாலத்தீவு கடற்படையினர் இந்திய கடற்படைக்குத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையினர் சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரில் சென்று மனு கொடுத்துள்ளனர். அதில், மாலத்தீவு சிறையில் உள்ள 25 மீனவர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களை மீட்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளும் வெளியுறவுத்துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.