எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 25 மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல்ஜான்சன் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த 1-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காகச் சென்றனர்.

இவர்கள் 25 பேரும் நேற்று காலையில் மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல்நூல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படையினர், 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, மாலத்தீவு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகுகளையும் உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீன்வக சங்க பிரதிநிதிகளும், மத்திய - மாநில அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.